லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்
அபூமூசா அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) பயணத்தில் இருந்தோம். அப்போது மக்கள் உரத்த குரலில் "அல்லாஹு அக்பர்" (இறைவன் மிகப்பெரியவன்) என்று (தக்பீர்) கூறலாயினர்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "மக்களே! உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். மென்மையாக (மெதுவாக)க் கூறுங்கள். (ஏனெனில்), நீங்கள் காது கேட்காதவனையோ இங்கு இல்லாதவனையோ அழைப்பதில்லை. (மாறாகச்) செவியுறுவோனையும் அருகிலிருப்பவனையுமே அழைக்கிறீர்கள். அவன் உங்களுடனேயே இருக்கிறான்" என்று சொன்னார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலிருந்துகொண்டு, "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" (அல்லாஹ்வின் உதவியில்லாமல் யுக்தியுமில்லை; சக்தியுமில்லை) என்று கூறிக் கொண்டிருந்தேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் பின் கைஸே! உங்களுக்குச் சொர்க்கத்தின் கருவூலங்களில் ஒரு கருவூலத்தை நான் அறிவித்துத் தரட்டுமா?" என்று கேட்டார்கள். நான், "ஆம் (அறிவித்துத் தாருங்கள்), அல்லாஹ்வின் தூதரே!" என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ்" என்று சொல்லுங்கள்"என்றார்கள். இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது. - மேற்கண்ட ஹதீஸ் மேலும் மூன்று அறிவிப்பாளர்தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. - முஸ்லிம் 5237.
Comments
Post a Comment